நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த 18 வயது மாணவன் T. நவீன் கொலை வழக்கு, சுமார் 3 ஆண்டு காலத் தாமதத்திற்குப் பிறகு மீண்டும் விசாரணைப் பாதைக்குத் திரும்பியுள்ளது. இவ்வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு விடுவிக்கப்பட்டவருக்கு எதிரான அரசின் மேல்முறையீட்டு மனுவைக் கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, மற்ற நான்கு பேரின் மீதான விசாரணை மீண்டும் தொடங்கவுள்ளது.
நீதிபதி நொருடின் ஹசான் தலைமையிலான, நீதிபதிகள் வஜீர் ஆலம் மைதின் மீரா மற்றும் அஸிமா ஒமார்ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட நீதிபதி குழு இந்த உத்தரவை பிறப்பித்தது.
இவ்வழக்கின் ஐந்தாவது குற்றவாளியான 35 வயது எஸ். கோபிநாத் என்பவரின் கடைசி முகவரியில் அவரைத் தொடர்பு கொள்ளப் பலமுறை முயன்றும், அவர் இருக்குமிடத்தைக் கண்டறிய முடியவில்லை என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் ஆலன் சுமன் பிள்ளை நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கோபிநாத்துக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் குழுவினர் தள்ளுபடி செய்தனர்.
கடந்த 2017 ஜூன் 9 ஆம் தேதி இரவு, பினாங்கு,புக்கிட் குளுகோர், ஜாலான் காகி புக்கிட்டில் உள்ள கர்ப்பால் சிங் கற்றல் மையம் அருகே தி.நவீன் என்ற பதின்ம வயது இளைஞர் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த நவீன், சுயநினைவு திரும்பாமலேயே கடந்த 2017 ஜுன் 15 ஆம் தேதி உயிரிழந்தார். இந்தச் கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் கடுமையான கண்டனங்களையும், பகடிவதைகளையும் மற்றும் வெறுப்புணர்வுக்கு எதிரான விவாதங்களையும் எழுப்பியது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜே. ராகேசுதன், எஸ். கோகுலன் மற்றும் சம்பவத்தின் போது சிறுவர்களாக இருந்த இருவர் உட்பட நான்கு பேரை கடந்த 2023 அக்டோபரில் பினாங்கு உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
எனினும், கடந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி புத்ரா அப்பீல் நீதிமன்றம், பினாங்கு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, அந்த நால்வருக்கு எதிராக அரசு தரப்பு அடிப்படை முகாந்திரங்களை நிரூபித்துள்ளதாக கூறி, அவர்களைத் எதிர்வாதம் செய்ய உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நால்வரும் மீண்டும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த நான்கு பேருக்கு எதிரான எதிர்வாத விசாரணை தேதிகளை முடிவு செய்வதற்கான வழக்கு நிர்வாகம் தொடர்பில் வரும் ஜூலை 3-ஆம் தேதி பினாங்கு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.








