மலாயன் புலிகளின் எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டு 150-க்கும் குறைவாகச் சரிந்திருந்த நிலையில், தற்போது அவற்றின் எண்ணிக்கையில் முன்னேற்றம் காணப்படுவதாக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் ஆர்தர் ஜோசஃப் குருப் தெரிவித்தார்.
2021-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் தற்போதைய புலிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
தேசியப் புலிகள் பாதுகாப்பு செயலாக்கப் பணிக்குழு கூட்டத்தில், வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையின் பெர்ஹிலிதான் கே-9 பிரிவை வலுப்படுத்தும் திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
மேலும், நான்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் புலிகள் பாதுகாப்புக்கான கேட்ஸ் தரச்சான்றைப் பெற்றுள்ளன. அவை பகாங் -கிளந்தான்-திரெங்கானு தேசியப் பூங்கா, எண்டாவ்-ரோம்பின் தேசியப் பூங்கா, தெமெங்கோர் வனத் தொகுதி மற்றும் அமான்ஜெயா வனக் காப்பகம் ஆகும்.
1950-களில் 3,000-க்கும் அதிகமாக இருந்த மலாயன் புலிகளின் எண்ணிக்கை, வேட்டையாடுதல் மற்றும் உணவு, வாழ்விட இழப்பு காரணமாக 2021-ல் 150-க்கும் குறைவாகக் குறைந்தது.








