Dec 4, 2025
Thisaigal NewsYouTube
விமான நிலையத்தில் முகப்பிடங்களில் செட்டிங் முறை, அமலாக்க அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

விமான நிலையத்தில் முகப்பிடங்களில் செட்டிங் முறை, அமலாக்க அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளார்

Share:

சிப்பாங், ஜூலை.24-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை முகப்பிடத்தில் செட்டிங் முறையில் ஓர் அமலாக்க அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளார் என்பது சிசிடிவி கேமராவில் கண்டுபிடிக்கப்பட்டது.

செட்டிங் முறை அமைக்கப்பட்ட முகப்பிடத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9.20 மணியளவில் அந்த அமலாக்க அதிகாரி சந்தேகத்திற்கு இடமாகச் செயல்பட்டது ரகசிய கேமராவின் மூலம் தெரிய வந்தது.

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சியைச் சேர்ந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அமலாக்க அதிகாரியை மடக்கிச் சோதனையிட்டனர். அப்போது அவரிடம் 8 ஆயிரத்து 391 ரிங்கிட் 45 காசு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் மூன்று தொடர்புத்துறை சாதனங்களும், கடப்பிதழ்களின் எண் வரிசை பதிவையும் அவர் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடப்பிதழ்களின் ஆகக் கடைசி நான்கு எண்களை அவர் பதிவு செய்து வைத்திருந்தது, சம்பந்தப்பட்ட நபர்களை சட்டவிரோதமாக வெளியேற்றுவதற்கு அவர் திட்டமிட்டு இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அந்த அதிகாரி, எல்லைப் பாதுகாப்பு, கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News