பினாங்கு, Kepala Batas, ஹோட்டல் ஸ்ரீ மலேசியாவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு தேசிய அளவிலான செந்தமிழ் விழா தொடக்க நிகழ்வில் பாரம்பரிய நிகழ்வான தமிழ் வாழ்த்து பாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட சம்பவத்தை கல்வி அமைச்சு கடுமையாக கருதுவதாக அறிவித்துள்ளது.
இப்படியொரு சம்பவம் நிகழ்ந்தது குறித்து மிகுந்த அக்கறை கொள்வதாக அது குறிப்பிட்டுள்ளது. அதேவேளையில் தேசிய அளவிலான செந்தமிழ் விழாவை ஏற்று நடத்திய பினாங்கு மாநில கல்வி இலாகா, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓர் அறிக்கையின் வழி விளக்கம் தந்துள்ளது.
செந்தமிழ் விழா என்பது முழுக்க முழுக்க தமிழ்மொழி சார்ந்த ஒரு நிகழ்வாகும். தமிழ்மொழி, கலை, கலாச்சார - செறிவுகளை தாங்கிய ஒரு நிகழ்வில் தமிழ் வாழ்த்து அல்லது கடவுள் வாழ்த்து பாடக்கூடாது என்று கல்வி அமைச்சு எந்தவொரு தடையும் விதித்தது இல்லை என்று ஓர் அறிக்கையின் வாயிலாக அது விளக்கம் தந்துள்ளது.
பல்லின சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை உணர்வை விதைக்கும் அதேவேளையில் மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையிலான இது போன்ற மொழி, கலாச்சார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுவதை கல்வி அமைச்சு எல்லா நிலைகளிலும் ஊக்குவித்து வந்துள்ளது என்று அது விளக்கம் தந்துள்ளது.
செந்தமிழ் விழாவில் தமிழ் வாழ்த்து பாடுவதற்கு தேவையற்ற தடைகள் பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறித்த பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ எஸ். சுந்தரராஜு தமது கண்டனத்தை தெரிவித்து இருப்பது தொடர்பில் பதில் அளிக்கும் வகையில் கல்வி அமைச்சு இந்த விளக்கத்தை தந்துள்ளது.
செந்தமிழ் விழாவில் தமிழ் வாழ்த்து பாட தடைவிக்கப்பட்டது தொடர்பில் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சிக்கு உறுப்பினர் டத்தோ சுந்தரராஜு நேற்று கோரிக்கை விடுத்து இருந்தார்.








