எதிர்வரும் மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் இடையே முன்மொழியப்பட்டுள்ள ஒத்துழைப்பு தொடர்பான விவரங்களை ஆராயும் பொறுப்பு, பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ அமீருடின் ஷாரி-க்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமரும், அக்கூட்டணியின் தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான அமீருடின் ஷாரி உடனான சந்திப்பில், மலாக்கா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாக வெளியான தகவலை அன்வார் மறுத்துள்ளார்.
அச்சந்திப்பானது, சுக்மா விளையாட்டு தொடர்பானது என்றும், அரசியல் குறித்து பேசுவதற்கு அப்போது நேரம் இல்லை என்றும், இன்று நடைபெற்ற தேசிய மௌலிதுர் ரசூல் விழாவில் கலந்து கொண்ட அன்வார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், மலாக்கா தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது வாழ்க்கையிலும் நிர்வாகத்திலும் ஒத்துழைப்பு முக்கியமானது என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் தொடர்புத்துறை இயக்குநர் மற்றும் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில்-லும், அன்வார் மற்றும் அமீருடின் ஷாரி இடையிலான சந்திப்பை உறுதிப்படுத்தியிருந்தார்.
எதிர்வரும் மலாக்கா தேர்தலில் பாரிசான் நேஷனல் உடன் ஒத்துழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் குழு ஆராயும் என்று அன்வார் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
அதேவேளையில், அக்குழுவிற்கு அமீருடின் ஷாரி மற்றும் பக்காத்தான் ஹராப்பான் பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








