கோலாலம்பூர், ஆகஸ்ட்.23-
அனைத்துலக முதலீட்டுத் திட்ட மோசடி தொடர்பாக மேலும் ஆறு முக்கியப் புள்ளிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த ஆறு பேரில் மூன்று பேர் டத்தோ அந்தஸ்தைக் கொண்டவர்கள் என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
பிடிபட்டவர்களில் பலர், மலேசியப் பங்கு பரிவர்த்தனைச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆவர் என்று ஐஜிபி தெரிவித்தார்.
எம்பிஐ இண்டர்நேஷனல் குருப் என்ற பெயரில் இவர்கள் மிகப் பெரிய முதலீட்டு திட்டத்தை நடத்தி வந்திருக்கின்றனர். இதில் முதலீடு செய்த பலர் பணத்தைப் பறி கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கடந்த மே 30 ஆம் தேதி நடத்தப்பட்ட விசாரணையின் போது 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்குச் சொந்தமான 381 கோடி ரிங்கிட் பெறுமானமுள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
அப்போது கைது செய்யப்பட்டவர்களில் டான் ஶ்ரீ மற்றும் டத்தோ ஶ்ரீ அந்தஸ்தைக் கொண்ட வர்த்தகர்களும் அடங்குவர் என்று டான் ஶ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.








