Dec 10, 2025
Thisaigal NewsYouTube
ஐ.ஜி.பி.யுடனான சந்திப்பு ஏமாற்றம் அளிக்கிறது: மனம் திறந்தார் இந்திரா காந்தி
தற்போதைய செய்திகள்

ஐ.ஜி.பி.யுடனான சந்திப்பு ஏமாற்றம் அளிக்கிறது: மனம் திறந்தார் இந்திரா காந்தி

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.10-

போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயிலுடன் இன்று பிற்பகலில் தாம் நடத்திய சந்திப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று ஒரு முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியையான எம். இந்திரா காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

மதம் மாறிய தனது முன்னாள் கணவர் கே. பத்மநாபனால் 16 ஆண்டுகளுக்கு முன்பு தம்மிடமிருந்து அபகரித்துச் செல்லப்பட்ட தனது அன்பு மகள் பிரசன்னா டிக்‌ஷாவைக் கண்டுபிடித்து கொடுக்கும் நடவடிக்கையில் போலீஸ் துறை என்ன செய்துள்ளது என்பது குறித்து சில தகவல்களைப் பெறுவதற்காக நம்பிக்கையுடன் ஐஜிபி.யைச் சந்திக்கச் சென்றேன்.

ஆனால், இந்த 16 ஆண்டு காலத்தில் நாங்கள் பார்க்கும் ஒவ்வொரு ஐஜிபி.யும், முழு கதையையும் மீண்டும் சொல்ல சொல்கிறார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள், இதுவரை எதுவும் செய்யவில்லை என்பது போல் உணர முடிகிறது. ஆனால், நாங்கள் இன்னமும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்று இந்திரா காந்தி தெரிவித்தார்.

இன்று பிற்பகலில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் போலீஸ் படைத் தலைவருடன் நடத்திய சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கவலை தோய்ந்த குரலில் இந்திரா காந்தி தனது மனபாரத்தைக் கொட்டித் தீர்த்தார்.

இந்த சந்திப்பு உண்மையிலேயே மனச் சோர்வை ஏற்படுத்துகிறது. 6 மாதக் கைக்குழந்தையாக தம்மிடமிருந்து பறித்துச் செல்லப்பட்ட தனது மகள் பிரசன்னா டிக்‌ஷாவிற்கு இன்று 18 வயது எட்டியிருக்கும். பருவ மங்கையாக இருப்பார். அவரை இதுவரை தாம் பார்க்காதது பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்று இந்திரா காந்தி குறிப்பிட்டார்.

இன்று காலை 4.30 மணிக்கு ஐஜிபி.யுடன் தாங்கள் நடத்திய சந்திப்பு ஒரு முறை சாரா கலந்துரையாடலாக மாறியது என்று இந்திரா காந்தியுடன் புக்கிட் அமானுக்குச் சென்ற இந்திரா காந்தி நடவடிக்கைக் குழுத் தலைவர் அருண் துரைசாமி தெரிவித்தார்.

அரசாங்கம் அறிவித்த பூடி 95 பெட்ரோல் சலுகைத் திட்டத்தை கே. பத்மநாபன் என்ற முகமட் ரிடுவான் இன்னமும் பயன்படுத்தி வருவதைத் தாங்கள் ஐஜிபிடம் வினவியதாக அருண் துரைசாமி தெரிவித்தார்.

எனினும் இந்திரா காந்தியையும் அவரது மகளையும் ஒன்றிணைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஐஜிபி உறுதி அளித்து இருப்பதாக அருண் துரைசாமி விளக்கினார்.

Related News