கோலாலம்பூர், அக்டோபர்.31-
கடந்த மே 13 ஆம் தேதி பேரா, தெலுக் இந்தானில் அரச மலேசிய போலீஸ் படையின் கலகத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஒன்பது போலீஸ்காரர்களின் உயிரைப் பறித்த கோர விபத்துக்கு டிப்பர் லோரியே மூலக் காரணமாகும் என்று போக்குவரத்து அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
தெலுக் இந்தான், ஜாலான் சிக்குஸ் – சுங்கை லம்பாமில் நிகழ்ந்த இந்த விபத்தில் கலகத் தடுப்பு போலீஸ்காரர்களை ஏற்றி வந்த அரச மலேசிய போலீஸ் லோரியும், கற்கனை ஏற்றி வந்த டிப்பர் லோரியும் சம்பந்தப்பட்டு இருந்தது.
எனினும் அந்த டிப்பர் லோரி கற்களை ஏற்றுவதற்கு அனுமதிக்கப்பட்ட எடையை விடக் கூடுதலாக 70 விழுக்காடு கற்களை ஏற்றி வந்துள்ளது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
அதிக எடையின் காரணமாக அந்த டிப்பர் லோரி சமநிலையை இழந்துள்ளது. இதன் காரணமாக வழிதடம் மாறி எதிர்த்திசைக்குச் சென்ற டிப்பர் லோரி, தெலுக் இந்தானிலிருந்து ஈப்போவை நோக்கிச் சென்று கொண்டு இருந்த போலீஸ் லோரி மீது மோதியுள்ளது என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஒன்பது கலகத் தடுப்பு போலீஸ்காரர்கள் மற்றும் காயத்திற்கு ஆளான இதர ஒன்பது போலீஸ்காரர்கள் அனைவரும் தெலுக் இந்தான் சித்ரா பௌர்ணமி திருவிழாவில் இரத ஊர்வலத்திற்குப் பாதுகாப்பு அளித்தவர்கள் ஆவார்.
இரத ஊர்வலம் முடிந்து போலீஸ் லோரியில் அனைவரும் ஈப்போவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்தக் கோர விபத்து நிகழ்ந்தது.








