கோலாலம்பூர், செப்டம்பர்.17-
எதிர்வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல், தற்போதைய QR குறியீடு அடிப்படையிலான மை போர்டர் பாஸ் முறைக்குப் பதிலாக, NIISe என்ற தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு முறையை உள்துறை அமைச்சு அறிமுகம் செய்யவுள்ளது.
முதற்கட்ட சோதனை முயற்சியாக ஜோகூர் சுல்தான் அபு பாக்கார் கொம்ப்ளெக்ஸ் மற்றும் சுல்தான் இஸ்கண்டார் பில்டிங் ஆகிய குடிநுழைவு வாயில்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாட்டின் முதன்மை விமான நிலையங்களான கேஎல்ஐஏ முனையம் 1 மற்றும் 2, பினாங்கு பாயான் லெப்பாஸ் விமான நிலையம், கூச்சிங் அனைத்துலக விமான நிலையம் மற்றும் கோத்தா கினபாலு அனைத்துல விமான நிலையம் ஆகியவற்றிலும் இம்முறை செயல்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டின் அத்தனை குடிநுழைவு வாயில்களிலும் NIISe முறை முழுமையான செயல்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மடானி அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கைகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த தானியங்கி முறை மூலம் குடிநுழைவு வாயில்களில் சோதனைகள் மேலும் பலப்படுத்தப்பட்டு நாட்டின் பாதுகாப்பு உறுதிச் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.








