குவாந்தான்-கெமாமான் சாலையில், செராத்திங் பாலம் அருகே இரசாயன ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சுமார் 1,000 லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் அருகில் உள்ள சதுப்புநிலக் காட்டில் கசிந்தது.
ஜோகூர், பாசிர் கூடாங்கிலிருந்து திரெங்கானு, கெமாமான் நோக்கி 24 டன் அமிலத்துடன் சென்ற அந்த லாரி, இன்று காலை 7.32 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகப் பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் உடனடியாகக் கெமாமான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அமில வாயு காற்றில் பரவுவதைத் தடுக்கவும், அது முக்கியச் சாலைக்குக் கசிவதைத் தவிர்க்கவும் தீயணைப்புப் படையினர் உடனடியாக நீர்த் திரை தடையை ஏற்படுத்தினர். மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க சுற்றுச்சூழல் துறை, சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் இணைந்து, கவிழ்ந்த லாரியிலிருந்து அமிலத்தை மற்றொரு லாரிக்கு மாற்றும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டது.








