ஜோகூர் மேம்பாலம் விரைவு போக்குவரத்து திட்டம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சு தெளிவான மற்றும் அவசர நடவடிக்கைகளை எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு தொடங்கப்படவுள்ள ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பு ஆர்.டி.எஸ் இணைப்புக்கு முன்னதாக இந்தத் திட்டத்தில் ஏற்படும் தாமதங்கள் போக்குவரத்து நெரிசலை மேலும் மோசமாக்கும் என்று ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் எச்சரித்துள்ளார்.
ஆர்.டி.எஸ் இணைப்பு தொடங்கப்படும் போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இத்திட்டம் மிகவும் அவசியமாகும். ஆனால், இத்திட்டத்திற்கான பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து போக்குவரத்து அமைச்சு தெளிவான காலக்கெடுவை வழங்காமல், இது மற்றொரு பிரிவின் கீழ் வருவதாகக் கூறி தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பினாங்கு எல்.ஆர்.டி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது போல, ஜோகூர் ஈ-ஏஆர்டி திட்டத்திற்கும் குறைந்தது RM10 பில்லியன் வரை மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், மாநில அரசிடமே இத்திட்டத்தின் அமலாக்கப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் வீ கா சியோங் கோரிக்கை விடுத்துள்ளார். இது அரசியல் சார்ந்த விஷயம் அல்ல, மக்களின் நலன் மற்றும் ஜோகூரின் பொருளாதார வளர்ச்சி சார்ந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








