நாட்டின் பொதுப் பல்கலைக்கழகங்களில் சுமார் 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் மாணவர்கள் 'பின்வாசல்' வழியாக முறைகேடாக நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, நாட்டின் உயர்கல்வித் துறையின் நேர்மைத்தன்மையை சீர்குலைக்கும் ஒரு கடுமையான குற்றச்சாட்டாகும் என உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக சேர்க்கை முறை முற்றிலும் வெளிப்படையானதாகவும், தகுதியின் அடிப்படையிலும் மட்டுமே நடைபெறுகிறது என்று குறிப்பிட்ட அவர், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள் முறைகேடாகச் சேர்ந்திருந்தால், அதைக் கூறியவர்கள் முறையான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆதாரமற்ற இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகப் பல பொதுப் பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே போலீஸ் துறையில் புகார் அளித்துள்ளன. கருத்துச் சுதந்திரம் என்பது ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்புவதற்கான உரிமம் அல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.








