முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், வீடற்ற நபர் ஒருவரைத் தாக்கி அவரது மரணத்திற்கு காரணமானதாகக் குற்றம் சாட்டப்பட்ட குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நூர் ருவேனா நூர்டின் முன்னிலையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. கொலைக் குற்றச்சாட்டாக இருந்த இந்த வழக்கு, திட்டமிடப்படாத கொலைக் குற்றமாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெண் ஒருவருக்குத் தொந்தரவு கொடுத்த வீடற்ற நபரை இப்பாதுகாப்பு அதிகாரி கண்டித்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த நபர் பாதுகாப்பு அதிகாரியின் முகத்தில் கவண் வில்லால் தாக்க, கோபமடைந்த அதிகாரி பதிலுக்கு அவரை உதைத்தும் பையால் அடித்தும் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அந்த நபர் மறுநாள் உயிரிழந்தார்.
பாதுகாப்பு அதிகாரிக்கு கொலை செய்யும் நோக்கம் இருக்கவில்லை என்றும், தற்காப்பு மற்றும் கோபத்தின் காரணமாகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதுகாப்பு அதிகாரி தப்பியோடாமல் அவரே போலீசில் புகார் அளித்தது உறுதிப்படுத்தப்பட்டதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.








