ஷா ஆலம், தாமான் ஆலம் மெகா பகுதியில் கடந்த மாதம் நடந்த மோதலில் 23 வயது இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சகோதரர்கள் இருவர் உட்பட 8 பேர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
46 வயது சோலாமி அகிம்ஷா, 42 வயது எஸ்.ஆர். ஹரிகிருஷ்ணன், 39 வயது எம்.கே. புவனேஸ்வரன், 37 வயது ஏ. ரூபன், 29 வயது கே. திவாகர், இரு சகோதர்களான 26 வயது ஷேக் ஹஸனுதீன் அஹ்லாவுதீன், 24 வயது ஷேக் மவ்லுதீன் அஹ்லாவுதீன் மற்றும் 23 வயது ஆர். டார்வின் ராஜ் ஆகியோர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி பிற்பகல் 1.59 மணியளவில், ஷா ஆலாம், தாமான் ஆலம் மெகா, ஜாலான் மேண்டலின்னில் 23 வயது இளைஞரை கொலை செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் எண்மரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
எண்மருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்ததுடன் வழக்கை அக்டோபர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த கொலையானது, இரு கும்பல்களுக்கு இடையில் நடந்த தாக்குதலில் , நீல நிற பெரோடுவா அல்சா காரினால் ஒருவர் மோதப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.








