நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பேரிடரைத் தொடர்ந்து 55 மலேசியர்கள் இன்னும் தொடர்பின்றி இருக்கும் நிலையில், அவர்களது குடும்பங்களுக்கு உளவியல் ஆதரவு வழங்க தமிழ் பேசக்கூடிய தகுதிபெற்ற ஆலோசகர்கள் உடனடியாக தேவை என மலேசியா சாலிடாரிட்டி: ஃபேமிலிஸ் இன் ஹோப் அமைப்பான –(மாஸ்பி) வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாஸ்பி-ன் பேச்சாளரும், மருத்துவருமான டாக்டர் ஆர். மணிவண்ணன் கூறுகையில் , காணாமல் போனவர்களின் குடும்பங்களில் பலர் வயதானவர்கள் என்பதால், அவர்களுக்கு உளவியல் ஆதரவு அல்லது ஆலோசனைக்கூறுகின்றவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் தாய்மொழியான தமிழிலேயே பேசினால் அவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நேபாள வெள்ளப்பேரிடரில் தங்களின் அன்புக்குரியவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, எங்கே இருக்கிறார்கள் என்ற தகவலுக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கும் இந்தக் குடும்பங்களுக்கு, இந்த நீண்ட மௌனம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், அவர்களின் உணர்வுகளை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் நேரடியாக உளவியல் ஆதரவு வழங்கப்பட வேண்டும் எனமாஸ்பி வலியுறுத்தியுள்ளது.
மேலும், குடும்பத்தினர் தங்களது அன்புக்குரியவர்களிடம் வெள்ளப்பேரிடரால் ஏற்பட்டிருக்கக்கூடிய மன உளைச்சலுக்கான அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைக் கவனித்து, தேவைப்பட்டால் உரிய உளவியல் பரிசோதனை மற்றும் ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் டாக்டர் மணிவண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சம்பவம் நிகழ்ந்து ஒன்பது நாட்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், தங்களின் அன்புக்குரியவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்காமல் ஒவ்வொரு நிமிடமும் வேதனையுடன் காத்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இப்போது அவர்களுக்கு தேவைப்படுவது வெறும் தகவல் மட்டுமல்ல; அவர்களின் வலியைப் புரிந்து கொண்டு, அவர்களின் துயரத்துக்கு அருகில் இருந்து ஆறுதல் கூறும் ஒரு குரல். அந்த ஆறுதல் அவர்களது தாய்மொழியான தமிழில் கிடைத்தால், அது அவர்களின் மனதை சற்றேனும் ஆற்றுப்படுத்தும்.
அவர்களிடம் பேசும் வார்த்தைகள் முழுமையாகப் புரிந்து, ஆலோசனைகளையும் நல்லுரைகளையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தமிழ் பேசும் உளவியல் ஆலோசகர்கள் அவர்களுடன் இருப்பது, இந்த வேதனையான நேரத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும் என்று டாக்டர் மணிவண்ணன் தெரிவித்தார்.








