ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சிலாங்கூர், தஞ்சோங் சிப்பாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கொடூரமாகக் கொன்று வீட்டை தீவைத்த சம்பவத்தில், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடைய 47 வயது காங் சாங் ஹெங் என்பவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
ஷா ஆலம் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி வழங்கிய மரண தண்டனைக்கு எதிரான அவரது மேல்முறையீட்டை மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவினர், ஒருமனதாக நிராகரித்தனர்.
2017 டிசம்பர் 13-ஆம் தேதி அதிகாலை நடந்த இந்தச் சம்பவத்தில், 73 வயது சியா டீ நாங், அவரது 68 வயது மனைவி லிம் மே ஷாக், மற்றும் அவர்களது 3, 4 வயதுடைய இரண்டு பேரக்குழந்தைகள் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் உயிர் தப்பிய 11 வயது பேரனையும் கத்தியால் கழுத்தில் இருமுறை வெட்டிய பின்னர், குற்றவாளி வீட்டுக்கு தீ வைத்ததாக நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கின் அசாதாரண கொடூரத்தைக் கருத்தில் கொண்டு, மரண தண்டனை தொடர வேண்டும் என நீதிபதி டத்தோ நூரின் படாருடின் தெரிவித்தார்.








