நாட்டின் 16-ஆவது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எனினும், தேர்தல் தொடர்பான எந்தவொரு முடிவையும் அவசரமாக எடுக்காமல், நன்கு பரிசீலித்த பின்னரே எடுப்பதாகவும், அதன் பின்னர் அந்த முடிவை மாமன்னரிடம் சமர்ப்பிப்பதாகவும் இன்று வெள்ளிக்கிழமை அம்பாங், மஸ்ஜித் புகித் இண்டா-வில் நடைபெற்ற தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்வார் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்ற பரிந்துரைகளுக்கு துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி மற்றும் பாஸ் கட்சித் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் ஆகியோர் சமீபத்தில் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் உடனடி கவனம் பொருளாதாரம், மக்களின் நலன், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை ஒழிப்பது ஆகியவற்றிலேயே இருப்பதாக அன்வார் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் அரசாங்கம் நிலையாக இருப்பதாகவும், முக்கிய பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் விவரித்துள்ளார்.
இதனிடையே, பொதுப் பொறுப்புகளில் இருப்பவர்கள் தங்களது பதிவுகள் தூய்மையாக இருந்தால், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், போலீஸ் மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட அமலாக்க அமைப்புகளின் விசாரணைகளுக்கு அஞ்சத் தேவையில்லை என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
“ஆதாரங்கள் இருந்தால் விசாரணையைத் தொடருங்கள்; ஆதாரங்கள் இல்லையெனில் அவர்களை விடுவியுங்கள்,” என்று அமலாக்க நடவடிக்கைகள் ஆதாரத்தின் அடிப்படையிலும், நியாயமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக 16-வது பொதுத்தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட்டாலும் அல்லது திட்டமிட்ட காலத்திலேயே நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக, சாஹிட் ஹமீடியும், அப்துல் ஹாடி அவாங்கும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








