பெர்லிஸ் மாநிலம் புக்கிட் லாகி-யில் ஆலயம் ஒன்று இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பதற்றத்தைத் தூண்டும் வகையில் டிக்டாக் பதிவு வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் 55 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 22 முதல் 27-ஆம் தேதி வரை அந்தப் பதிவுக்கு எதிராக 15 புகார்கள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெட்டாலிங் ஜெயா-வில் நேற்று காலை 10 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக கங்கார் மாவட்டப் போலீஸ் தலைவர் யுஷரீஃபுதீன் முகமது யூசோப் தெரிவித்துள்ளார்.
அந்த டிக்டாக் பதிவில், Bukit Lagi-யில் உள்ள ஸ்ரீ வீரா மகா காளியம்மன் கோவில் அமைந்திருந்த இடத்தில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெறவிருந்த “பெர்ஹிம்பூனன் மேரா மகா காளி” கூட்டத்திற்கான அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.
அந்த ஆலயமானது சட்டப்படி கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி அதிகாரிகளால் இடிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, அறிவிக்கப்பட்டிருந்த அந்த கூட்டமானது சமயம் மற்றும் இனப் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என புகார்தாரர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து செல்போன் மற்றும் சிம் அட்டையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அதேவேளையில் சம்பந்தப்பட்ட டிக்டாக் கணக்கு அவருக்குச் சொந்தமானது என்பதையும் அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
இந்நிலையில், இரண்டு நாட்கள் தடுப்புக் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், தேச நிந்தனைச் சட்டம் 1948-ன் பிரிவு 4(1) மற்றும் தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-ன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








