கெசாஸ் நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சாலை முழுவதும் வெள்ளை நிறத்தில் பனிபோல் காட்சியளித்ததால், அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின.
ஆனால், அது பனிபொழிவு அல்ல என்றும், கனமழையால் சாலையில் ஏற்கனவே சிந்தியிருந்த சோப்பு கழிவுகள் நுரையாக மாறியதே காரணம் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி கோத்தா கெமுனிங் ஸ்லிப் ரோட் அருகே லாரியில் இருந்து சோப்பு பொருள் சாலையில் சிந்தியிருந்த நிலையில், தீயணைப்புத் துறையினர் ஸாவ்டஸ்ட் பயன்படுத்தி அதனை சுத்தம் செய்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று பெய்த கனமழையால் மீதமிருந்த சோப்பு கழிவுகள் நுரையாக உருவாகி, கிலோமீட்டர் 30 முதல் 30.5 வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சாலையை மூடியது.
இதனையடுத்து, நெடுஞ்சாலை நிர்வாகம் மீண்டும் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு, மாலை 4.58 மணியளவில் பணிகளை நிறைவு செய்தது.
இதனிடையே, சோப்பு நுரை காரணமாக சாலை வழுக்கலாகியிருக்கலாம் என்ற அச்சம், குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டிகளிடையே ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.








