மலேசியா ஏர்லைன்சில் பணியாற்றி வரும் 98.8 சதவிகித விமானப் பணியாளர்களுக்கு போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அனைவருக்கும் எதிர்மறை முடிவுகள் கிடைத்துள்ளதாக மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமமான எம்.ஏ.ஜி அறிவித்துள்ளது.
மீதமுள்ள 1.2 சதவிகித விமானப் பணியாளர்களுக்கும் இன்று வெள்ளிக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், இந்த பரிசோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் எம்.ஏ.ஜி தலைவர் மற்றும் குழும தலைமை நிர்வாக அதிகாரி நசாருடின் ஏ பக்கார் தெரிவித்துள்ளார்.
மேலும், விமானிகளும் தொடர்ந்து பரிசோதிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையானது, கடந்த ஜூலை மாதம் இந்தோனேசியாவில் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் நிலை அதிகாரி ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி, பணியில் உள்ள அனைத்து மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனை செய்யப்பட்டு, எதிர்மறை முடிவுகள் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








