இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ மற்றும் திறந்தவெளி தீ வைப்பு சம்பவங்களில் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் பெயர்களையும், குறிப்பாக மலேசியாவுக்குச் சொந்தமான நிறுவனங்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என மலேசிய சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
காட்டுத்தீ சம்பவங்களுக்கு, இந்தோனேசிய அதிகாரிகள், மலேசியா மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்களை குற்றம்சாட்டுவதாகவும், ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறுவதாகவும் க்ரீன்பீஸ் மலேசியா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கோலாலம்பூரிலுள்ள இந்தோனிசிய தூதரகத்தில் இன்று கோரிக்கை மனுவைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் இடைக்காலத் தலைவர் ஹெங் கியா சுன், பொறுப்பான நிறுவனங்கள் தங்கள் பெயரைத் தெளிவுபடுத்தவும், விதிமுறைகளை மீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வெளிப்படைத்தன்மை அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எல்லை தாண்டும் புகைமூட்டம் தொடர்பான தனிச்சட்டத்தை மலேசியா கொண்டுவர வேண்டும் என்றும் அந்த அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், இந்தோனேசியாவுடன் இணைந்து தரவுகள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலைப் பகிர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று காலை சரவாக் மாநிலம் செரியான்-ல் காற்று மாசுக் குறியீடு 517 என்ற அபாயகரமான அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.








