கோலாலம்பூர், செப்டம்பர்.30-
புடி 95 சலுகை விலையில் ரோன் 95 பெட்ரோல் திட்டம் இன்று நாடு முழுவதும் சுமூகமாக நடைபெற்று வரும் வேளையில் முதல் நாளிலேயே அவ்வகை பெட்ரோலை வாங்க முடியாமல் வாகனமோட்டிகள் ஏமாற்றம் அடைந்த சில சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசு விலையில் ரோன் 95 பெட்ரோலை வாங்குவதற்கு மைகாட் அட்டை அவசியமாகும். மைகாட் அட்டையைப் பயன்படுத்தியே சலுகை விலையில் ரோன் 95 பெட்றோலைப் பெற முடியும்.
இந்நிலையில் மைகாட் அட்டையை உடன் கொண்டு வராதது, மென்பொருள் சேதமுற்ற மைகாட் அட்டை, காலாவதியான வாகனமோட்டும் லைசென்ஸ் முதலிய காரணங்களினால் சம்பந்தப்பட்ட வாகனமோட்டிகள் ரோன் 95 பெட்ரோலை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
எனினும் ஒட்டுமொத்த நிலையில் இத்திட்டம் நாடு தழுவிய நிலையில் எவ்வித சிக்கலின்றி சுமூகமாக நடைபெற்று வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.








