ஜார்ஜ்டவுன், அக்டோபர்.13-
மலேசிய இராணுவ வீரர்கள் சங்கத்திற்குச் சொந்தமான ஐந்து அடுக்குமாடி வீடுகள் விற்பனை தொடர்பில் 4 லட்சத்து ஐயாயிரம் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாக கூறப்படும் பணி ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது .
பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க அந்த முன்னாள் இராணுவ வீரர், இன்று காலை 10 மணியளவில் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்கு அழைக்கப்பட்ட போது கைது செய்யப்பட்டதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.
சங்கத்திற்குச் சொந்தமான அந்த ஐந்து அடுக்குமாடி வீடுகளையும், சந்தை விலையை விட மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து, அந்த வீடுகளை வாங்கிய நிறுவனத்திடமிருந்து 4 லட்சத்து ஐயாயிரம் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாக சந்தேகப்படுகிறது.
இந்தச் சம்பவம் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. வங்கிகளின் 12 பரிவர்த்தனைகள் வாயிலாக அந்த முன்னாள் இராணுவ வீரரின் வங்கிக் கணக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனம், பணத்தைப் பட்டுவாடா செய்துள்ளது.
இதனிடையே சம்பந்தப்பட்ட முன்னாள் இராணுவ வீரரை எஸ்பிஆர்எம் கைது செய்து இருப்பதை அதன் பினாங்கு மாநில இயக்குநர் டத்தோ S. கருணாநிதி உறுதிப்படுத்தினார்.








