தேசியப் பள்ளிகளில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களும் தங்களது தாய்மொழியான தமிழைக் கற்கும் வாய்ப்பைப் பெற வேண்டும் என பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்மொழி, பண்பாடு மற்றும் சமூக அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், பினாங்கு, லெபோ பாசார் கிராம சமூக நிர்வாகக் கழகம் ஏற்பாடு செய்த இலவச தமிழ் மொழி வகுப்பைத் தொடங்கி வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.
மொழி என்பது வெறும் தொடர்புக்கான கருவி மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் அடையாளத்தின் முக்கிய அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு வருடம் நடைபெறும் இந்த இலவச வகுப்பில் இந்தியர்களுடன் இரண்டு மலாய்க்காரர்களும், இரண்டு சீனர்களும் தமிழ் கற்க இணைந்துள்ளனர்.
இதனிடையே, பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு இந்த ஆண்டு மாநில அரசு 24 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் சாவ் கோன் இயோவ் தெரிவித்தார்.
“தமிழை மறக்காதீர்கள்; அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லுங்கள்” என்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என்பதையும் முதலமைச்சர் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.








