பெட்டாலிங் ஜெயா SS/45 பகுதியில் நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் இருந்த விளையாட்டு மைதானம், 4 லட்சத்து 77 ஆயிரம் ரிங்கிட் செலவில் முழுமையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இலக்கவியல் அமைச்சரும் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ, இன்று காலை மைதானத்தை பார்வையிட்டு, மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் புக்கிட் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் ஈ வேய், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினர் லோ ஓய் லூன் மற்றும் குடியிருப்பாளர் சங்கத் தலைவர் சிங் லெங் சூ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முன்னர், மழை பெய்யும்போது மைதானத்தில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறியதுடன், மைதானத்தின் தரையும் சீரற்றதாக இருந்தது. இதனால் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டதாக கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இதையடுத்து, மைதானத்தின் நிலத்தடி வடிகால் மற்றும் நீர் வெளியேற்ற அமைப்பு மேம்படுத்தப்பட்டு, மைதானம் முழுவதும் சமப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டின்போது பந்து வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் இருபுறங்களிலும் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பிரச்சினையை அப்பகுதி மக்கள் தமது கவனத்துக்குக் கொண்டு வந்ததாகக் குறிப்பிட்ட கோபிந்த் சிங் டியோ, நாடாளுமன்ற அலுவலகம், சட்டமன்ற அலுவலகம் மற்றும் மாநகர் மன்ற உறுப்பினர் ஆகியோரின் முயற்சியுடன் நிதி பெறப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.
அத்துடன், அப்பகுதியில் இரவு நேர குற்றச்செயல்களைத் தடுக்க 40 சூரிய ஒளி விளக்குகள் அமைக்க 50 ஆயிரம் ரிங்கிட்டும், பள்ளிவாசல் மேம்பாட்டுக்கு 59 ஆயிரம் ரிங்கிட்டும், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பூங்காக்களை மேம்படுத்த மேலும் 50 ஆயிரம் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.








