நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ, மலேசியாவின் பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவான SMART இன்று சனிக்கிழமை நேபாளத்துக்கு புறப்படுகின்றது.
நேபாள அரசின் ஒப்புதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
11 பேர் கொண்ட SMART குழுவினர், அதிக திறன் கொண்ட ட்ரோன்கள் மற்றும் சிறப்பு மீட்பு உபகரணங்களுடன் நேபாள அதிகாரிகள் மேற்கொள்ளும் தேடுதல் பணிகளுக்கு உதவ உள்ளனர்.
முன்னதாக, வெளிநாட்டு தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களின் உதவியை நேபாளம் நிராகரித்திருந்தது.
தனது சொந்த மீட்புக் குழுக்களே பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை என அந்நாடு தெரிவித்திருந்தது.
எனினும், பின்னர் ஏற்பட்ட தூதரக ரீதியான அழுத்தங்களைத் தொடர்ந்து தனது முடிவை மாற்றிக் கொண்டது.
இதனிடையே தேவை ஏற்பட்டால் சீன அதிகாரிகளுக்கும் உரிய தேடுதல் மற்றும் மீட்பு நிபுணத்துவ உதவிகளை வழங்க மலேசியா தயாராக இருப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேபாளம் மற்றும் சீனாவில் உள்ள 55 மலேசியர்களை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் இருப்பிடத்தை உறுதி செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.








