நாட்டின் தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங்கை ஏற்றுவதிலும் காட்சிப்படுத்துவதிலும் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் வலியுறுத்தியுள்ளார்.
கொடியை காட்சிப்படுத்துவதற்கு முன் அதற்கான முறையான வழிகாட்டுதல்களை பொதுமக்கள் சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜாலூர் கெமிலாங் என்பது நாட்டின் இறையாண்மை, கண்ணியம் மற்றும் ஒற்றுமையின் அடையாளம் என்றும், இனம், மதம் அல்லது அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும் அனைத்து மலேசியர்களும் தேசியக் கொடியை மதிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தேசியக் கொடி நாட்டின் அடையாளம், வரலாறு மற்றும் சுதந்திரத்தின் பெருமையை பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு, கவாசான் ருக்குன் தெத்தாங்கா மற்றும் ருக்குன் நெகாரா செயலகம் வாயிலாக, ஜாலூர் கெமிலாங்கை சரியான முறையில் நிறுவி காட்சிப்படுத்துவது தொடர்பான பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் என்றும் ஆரோன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே தேசப்பற்று மற்றும் தேசியக் கொடியை மதிக்கும் உணர்வை வளர்ப்பதே இதன் நோக்கம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தவறுதலாக ஏற்படும் கொடி தொடர்பான தவறுகளை கல்வி மற்றும் விழிப்புணர்வு மூலம் சரிசெய்ய வேண்டும் என்றும், ஆனால் தேசியச் சின்னத்தை திட்டமிட்டு அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் செயல்கள் சட்டப்படி கையாளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் படங்களிலும், ஜாலூர் கெமிலாங்கின் கோடுகள், நிறங்கள் அல்லது அமைப்பு தவறாக இடம்பெறக்கூடும் என்பதால், எந்தவொரு உள்ளடக்கத்தையும் வெளியிடுவதற்கு அல்லது பகிர்வதற்கு முன் அதன் துல்லியத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ஜாலூர் கெமிலாங்கை தலைகீழாக பறக்கவிடுவது உள்ளிட்ட தவறான பயன்பாடுகள், 1963ஆம் ஆண்டின் சின்னங்கள் மற்றும் பெயர்கள் முறையற்ற வகையில் பயன்படுத்தும் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என ஆரோன் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற குற்றங்களுக்கு 20 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








