கடந்த மாதம் கோலாலம்பூரில் குடிநுழைவுத் துறை வாகனம் ஒன்றால் ஏற்பட்ட உயிரிழப்பு விபத்தைத் தொடர்ந்து, அந்த வாகனங்களை இயக்குவதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் SOP-கள் குறித்த உள்விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனினும், அந்த விசாரணை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் முடிவில் வாகன ஓட்டுநர் நிலையான செயல்பாட்டு நடைமுறையை மீறியிருந்தால், இந்த விவகாரத்தில் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில், காலியாக இருந்த குடிநுழைவுத் துறையின் கருப்பு நிற மரியா லோரி சிவப்பு விளக்கை மீறி, சைரன் மற்றும் எச்சரிக்கை விளக்குகளை இயக்கிய நிலையில் புரோட்டான் சாகா கார் ஒன்றை மோதியது.
பின்னர் நிலைதடுமாறி 4 பேர் கொண்ட குடும்பத்தின் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுநர் மீது 5 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








