இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பாடியாலா பகுதியில் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெற்ற ரயில் பாதை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், தேடப்பட்டு வந்த இரு இந்திய பிரஜைகளை, மலேசிய போலீசார் இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளனர்.
இந்த நடவடிக்கையானது, இருவரையும் கண்டுபிடித்து கைது செய்ய இந்திய அதிகாரிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ எம். குமார் முத்துவேலு தெரிவித்துள்ளார்.
மலேசியா மற்றும் இந்தியா இடையிலான பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்த நாடு கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிராந்திய பாதுகாப்பை பாதிக்கும் கடுமையான குற்றங்களை எதிர்கொள்வதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் எம்.குமார் உறுதியளித்துள்ளார்.
இந்த ஒத்துழைப்பு, நாடு கடந்த குற்றங்களை ஒழிப்பதிலும், அனைத்துலக பாதுகாப்பு ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதிலும் மலேசிய போலீசார் தொடர்ந்து கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் எம் குமார் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், சட்டத்திலிருந்து தப்பித்து ஓடும் குற்றவாளிகளுக்கு மலேசியா ஒருபோதும் பாதுகாப்பான புகலிடமாக இருக்க அனுமதிக்கப்படாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பாடியாலா மாவட்டத்தில் உள்ள முக்கிய ரயில் பாதையை குறிவைத்து நடத்தப்பட்ட நாட்டு வெடிக்குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்திய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இருவரையும் தேடி வந்தனர்.
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சந்தேக நபர்கள் மலேசியாவிற்குள் நுழைந்து, அதிகாரிகளின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் தலைமறைவாக இருந்ததாக நம்பப்படுகின்றது.








