கேடிஎம்பி ரயில் மீது கல் வீசி, அதன் பெட்டியின் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததாகக் கூறப்படும் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்த நிலையில், பெர்லிஸின் கம்போங் குவார் சஞ்சி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அச்சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அராவ் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் மோஹ்சின் ரோடி கூறுகையில், கம்போங் ஜெலெம்போக்கில் உள்ள மோட்டார் சைக்கிள் பாலம் அருகே சென்று கொண்டிருந்த ரயில் மீது சிறுவன் வேண்டுமென்றே கல் வீசியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆராவ் மற்றும் கோடியாங் ரயில் நிலையங்களுக்கு இடையே கேடிஎம் கொமுட்டர் உத்தாரா ரயில் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் வெளிப்புறத்திலிருந்து வீசப்பட்ட பொருள் தாக்கியதில் ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடி உடைந்ததைத் தொடர்ந்து, ரயில் ஓட்டுநர் ரயில்வே நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்ததாக கேடிஎம்பி முன்னதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.








