அரசாங்கத்துக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான நம்பிக்கை மற்றும் வரவு செலவுத் திட்ட ஆதரவு ஒப்பந்தமான சிஎஸ்எ-வில் இணைய விரும்பும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதாக அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
இதுவரை 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், மற்றவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் இணையலாம் என்றும் அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தம் நாட்டின் அரசியல் நிலைத்தன்மையையும், நிறுவனச் சீர்திருத்த முயற்சிகளையும் வலுப்படுத்தும் நேர்மறையான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், 2021 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான முந்தைய சிஎஸ்எ ஒப்பந்தத்தில் பின்பற்றப்பட்டதைப் போன்று, இருதரப்பும் இணைந்து ஒப்புக் கொள்ளப்பட்ட அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை மதிப்பீடு செய்யும் முறையை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் ஃபாஹ்மி தெரிவித்தார்.
முன்னதாக, பெர்சாத்து கட்சித் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேலும் ஏழு உறுப்பினர்கள் மற்றும் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் ஆகியோருடன் அரசாங்கம் சிஎஸ்எ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.








