நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறான பதிவுகளை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர், நீதிமன்றத்தில் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
44 வயது அப்துல்லா அய்டிட் மொக்தார், 46 வயது அஷாடி ஸிலிஸி ஸைனால் அபிடின் ஆகிய இருவரும் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி இல்மாமி அஹ்மாட் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, அவர்கள் குற்றச்சாட்டை மறுத்தனர்.
டிக் டாக் மற்றும் திரேட்ஸ் தளங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெவ்வேறு தேதிகளில் இப்பதிவுகளை வெளியிட்டதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது 5 லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஒவ்வொருவருக்கும் 15 ஆயிரம் ரிங்கிட் பிணை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு கோரிய நிலையில், நிலையான வேலை இல்லாததையும் நிதி நெருக்கடியையும் காரணம் காட்டி இருவரும் குறைந்த பிணைத் தொகையைக் கோரினர்.








