Jan 7, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் நலனே மடானி அரசாங்கத்தின் இலக்கு - பிரதமரின் 2026 புத்தாண்டுச் செய்தியை வரவேற்கிறது மனிதவள அமைச்சு!
தற்போதைய செய்திகள்

மக்களின் நலனே மடானி அரசாங்கத்தின் இலக்கு - பிரதமரின் 2026 புத்தாண்டுச் செய்தியை வரவேற்கிறது மனிதவள அமைச்சு!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.05-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று ஆற்றிய புத்தாண்டு உரையை மனிதவள அமைச்சு முழுமனதுடன் வரவேற்பதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

மக்களின் நல்வாழ்வு, சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்ட பிரதமரின் இந்த உரை, நாட்டின் முன்னேற்றம் சாமானிய மக்களை நேரடியாகச் சென்றடைவதை உறுதிச் செய்யும் வகையில் அமைந்துள்ளது என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

குறிப்பாக, E-hailing மற்றும் P-hailing போன்ற Gig பொருளாதாரத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் திறன் பயிற்சி மற்றும் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பிற்காக கூடுதலாக 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதை அமைச்சு வரவேற்பதாக டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.

இதற்கான நிதி உதவித் திட்டங்கள் திறன் மேம்பாட்டு நிதி கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், அதன் விரிவான நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வருமான வரி வாரியமான LHDN, CP500 தவணை முறையில் வரி செலுத்துதலில் தவறுதலாகத் தகவல் அளித்தவர்களுக்கு 2026-ஆம் ஆண்டு முழுவதும் அபராத விலக்கு அளிக்கும் முடிவை மனிதவள அமைச்சு உண்மையிலேயே பாராட்டுகிறது.

அதே வேளையில், 18 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்களுக்கு பிப்ரவரி 9 முதல் வழங்கப்படும் 100 ரிங்கிட் SARA உதவி மற்றும் ஜனவரி 20-ல் தொடங்கும் STR 2026 முதற்கட்ட நிதியுதவி ஆகியவை மக்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்க உதவும் முக்கிய மைல்கற்கள் என்று அமைச்சு கருதுவதாக டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

தவிர, கல்வித் துறையைப் பொறுத்தவரை, தமிழ்ப்பள்ளிகளின் சீரமைப்புப் பணிகளுக்காக 50 மில்லியன் ரிங்கிட், சீனப்பள்ளிகளுக்கு 80 மில்லியன் ரிங்கிட் மற்றும் சமயப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக 200 மில்லியன் ரிங்கிட் எனப் பரவலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த அறிவிப்புகளை முழுமையாகச் செயல்படுத்துவதில் மனிதவள அமைச்சு உறுதியுடன் இருப்பதாகவும், இதன் மூலம் எந்தவொரு தரப்பினரும் நாட்டின் வளர்ச்சியில் விடுபடாமல் இருப்பதை உறுதிச் செய்யப் போவதாகவும் டத்தோ ஶ்ரீ ரமணன் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News