இஸ்கண்டார் புத்ரி, ஜூலை.29-
தனது 6 வயது மகனைக் கொலை செய்து, யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டு, மகன் காணாமல் போனதாகப் பொய் புகார் அளித்து, நாடகமாடிய நபரை 7 நாள் தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.
கடந்த ஜுலை 24 ஆம் தேதி கைது செய்யப்பட்ட 36 வயதுடைய அந்த நபரை, வரும் வியாழக்கிமை வரை தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியைப் போலீசார் பெற்றுள்ளதாக ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எம். குமரேசன் தெரிவித்தார்.
தனது மகன் திஷாந்த், ஜோகூர், புக்கிட் இண்டாவில் கார் நிறுத்தும் இடத்தில் காரில் காத்திருக்கச் சொல்லி விட்டு, கடையில் உணவு வாங்கி விட்டு வருவதற்குள் காணாமல் போனதாக தந்தை முனுசாமி, கடந்த ஜுலை 24 ஆம் தேதி அதிகாலை 2.15 மணியளவில் போலீசில் புகார் செய்தார்.
கடந்த ஜுலை 23 ஆம் தேதி மாலை 6 மணியளவில் காணாமல் போன தனது மகனைக் கண்டுபிடித்து தரும்படி தந்தை முனுசாமி போலீசாரின் உதவியை நாடினார்.
இது தொடர்பாக போலீசார் தீவிர புலன் விசாரணை செய்ததில் சிறுவனின் தந்தை அளித்த வாக்குமூலத்தில் நிறைய முரண்பாடுகள் இருந்தது, போலீசுக்குச் சந்தேகம் வலுத்தது.
இதன் தொடர்பில் அன்றைய தினமே அந்த நபர் கைது செய்யப்பட்டார். விசாரணை முழு வீச்சில் தொடங்கிய போது அந்த நபர் தனது மகனைக் கொலை செய்து, புதைத்து விட்டதாக அம்பலமானது.
அணிந்த ஆடையுடன் கறுப்புப் பையில் கட்டப்பட்டு புதைக்கப்பட்ட அந்த 6 வயது பாலகனின் உடல், நேற்று மாலையில் நெகிரி செம்பிலான், ஜெம்போல், ரொம்பினில் உள்ள ஓர் இடத்தில் தோண்டி எடுக்கப்பட்டது.
அந்தச் சிறுவனின் உடல், ஜோகூர், புக்கிட் இண்டாவிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்திற்குக் கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. சிறுவனின் சடலம் தோண்டப்படும் போது அந்தச் சந்தேகப் பேர்வழியும் சம்பவ இடத்திற்குக் கொண்டு வரப்பட்டு புதைக் குழியைக் காட்டியுள்ளார்.
முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்து ஜோகூர் போலீஸ் தலைமையகத்திலிருந்து தாங்கள் தகவல் பெற்றதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஹ்மாட் ஸாஃபிர் முகமட் யூசோஃப் தெரிவித்து இருந்தார்.








