சரவாக் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் ஆசிரியரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தை உரிய பொறுப்புணர்வுடனும் கருணையுடனும் அணுக வேண்டும் என டத்தோ ஶ்ரீ ஃபாத்திமா அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சரவாக் மாநில மகளிர், குழந்தைப் பருவம் மற்றும் சமூக நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஃபாத்திமா அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறை அல்லது ஆயுதப் பயன்பாடு தொடர்பான எந்தவொரு சம்பவத்தையும் அலட்சியப்படுத்தக்கூடாது என்றும், பள்ளிச் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய மாணவர் இன்னும் வளர் இளம் பருவத்தில் இருப்பதால், அவரிடம் கருணையுடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தீங்கு விளைவிக்கும் நடத்தைகள் உரிய முறையில் கையாளப்பட வேண்டும் என்றாலும், சம்பவத்தின் பின்னணியை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இளம் வயதினரைக் குற்றம் சாட்டுவதோ, முத்திரை குத்துவதோ அல்லது அவமானப்படுத்துவதோ கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட மாணவரின் கண்ணியத்தைப் பாதுகாத்து, அவருக்குத் தேவையான வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்க முடியும் என்றும் ஃபாத்திமா அப்துல்லா உறுதியளித்துள்ளார்.








