நாடெங்கிலும் உள்ள விமான நிலையங்களில், போதைப்பொருட்களைக் கண்டறியும் தொழில்நுட்பம் கொண்ட ஸ்கேனர்கள் இல்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் பயணப் பை சோதனை ஸ்கேனர்கள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் ஆபத்தான உலோகப் பொருட்களைக் கண்டறிவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போதைப்பொருட்களைக் கண்டறிவது, சோதனை அதிகாரிகளின் அனுபவம், நேரடி ஆய்வு மற்றும் இடர் மதிப்பீடு ஆகியவற்றைப் பொறுத்தது என்று பத்தாங் சடோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரோடியா சஃபி எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மலேசிய விமானி ஒருவர் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதங்களும், பாதுகாப்பை பலப்படுத்தும் முறைகளும் விவாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.








