கோலாலம்பூர் லெபோ புடு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மிகப் பெரிய அளவிலான சோதனை நடவடிக்கையில், பதிவு செய்யப்படாத மருந்துகளை விற்பனை மற்றும் சேமித்து வைத்திருந்த 4 இடங்களை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது.
அவற்றில் 2 இடங்கள் சட்டவிரோத கிளினிக்குகளாக இயங்கி வந்ததாகச் சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த இடங்கள் துணிகள் விற்பனை மற்றும் பயண முகவர் நிறுவனங்கள் என்ற பெயரில் செயல்பட்டதாக கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்த சோதனையில் ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை பரிசோதனை கருவிகள் மற்றும் அமைச்சின் அனுமதி பெறாத மருந்துகள் கைப்பற்றப்பட்டன.
வெளிநாட்டினரைக் குறிவைத்து இந்த கிளினிக்குகள் செயல்பட்டதாகவும், வெளிநாட்டு மருத்துவர்கள் மூலம் இயக்கப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
நோயாளிகள் பின்புற அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை செய்த பின்னர் மருந்துகள் வழங்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.








