Sep 13, 2026
Thisaigal NewsYouTube
ஊழல் நிதி மீட்பது மட்டுமல்ல; நாட்டின் நம்பிக்கையையும் மீட்டெடுக்க வேண்டும்: அன்வார்
தற்போதைய செய்திகள்

ஊழல் நிதி மீட்பது மட்டுமல்ல; நாட்டின் நம்பிக்கையையும் மீட்டெடுக்க வேண்டும்: அன்வார்

Share:

1எம்டிபி ஊழல் நிதியை மீட்கும் நடவடிக்கையானது, பில்லியன் கணக்கான ரிங்கிட்டை திரும்பப் பெறுவது மட்டுமல்ல; நாட்டின் நிறுவனங்கள் மீதான நம்பிக்கையையும், உலகளவில் மலேசியாவின் மதிப்பையும் மீட்டெடுப்பதாகும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதி முறைகேடு தொடர்பாக டிபிஎஸ் வங்கி மீது சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் 1.3 பில்லியன் சிங்கப்பூர் டாலர்கள், மலேசிய மதிப்பில் சுமார் 4.2 பில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2013 முதல் 2014-ஆம் ஆண்டு வரை 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான முறைகேடான நிதி ஐந்து வங்கிக் கணக்குகள் மூலம் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

எனினும், டிபிஎஸ் வங்கி இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து, வழக்கை எதிர்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளது.

இதுவரை 1எம்டிபி தொடர்பாக 31.3 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அரசின் மொத்த நிதிப் பொறுப்பு 51.4 பில்லியனாக உள்ளது.

மீதமுள்ள இழப்பில் சுமார் 20 பில்லியன் ரிங்கிட்டை அரசாங்கமே ஏற்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, பிரிட்டன் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து நிதி மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related News