Sep 13, 2026
Thisaigal NewsYouTube
இந்தியாவின் அதிவேக பிராமோஸ் ஏவுகணையை வாங்க மலேசியா பரிசீலனை: அன்வார் - மோடி சந்திப்பில் முக்கிய முடிவு
தற்போதைய செய்திகள்

இந்தியாவின் அதிவேக பிராமோஸ் ஏவுகணையை வாங்க மலேசியா பரிசீலனை: அன்வார் - மோடி சந்திப்பில் முக்கிய முடிவு

Share:

இந்தியா தயாரிக்கும் பிராமோஸ் ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை மலேசியா ஆராய்ந்து வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

நேற்று 18-வது பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்பின் போது பிராமோஸ் ஏவுகணை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அன்வார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அடுத்தகட்ட முடிவை மலேசிய விமானப் படை அதிகாரிகளே எடுக்க வேண்டும் என்றும், இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தாம் ஆதரவாக இருப்பதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

பிராமோஸ் என்பது நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய அதிவேக பயண ஏவுகணை ஆகும்.

நீர்மூழ்கிக் கப்பல், போர்க்கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி ஏவுதளங்களில் இருந்து இதை ஏவ முடியும்.

இந்தியாவின் தற்காப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் ரஷ்யாவின் என்பிஓ மாஷினோஸ்ட்ரொயெனியா (NPO Mashinostroyeniya) இணைந்து இந்த ஏவுகணையை உருவாக்கியுள்ளன.

இதனிடையே, இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்தில் முக்கிய பங்காற்றிய காலம்சென்ற விஞ்ஞானி ஏ.பி.ஜே அப்துல் கலாம் தலைமையிலான இந்தியாவின் தற்காப்பு ஆராய்ச்சியின் பின்னணியில் உருவான பிராமோஸ், இன்று உலகின் அதிவேக பயண ஏவுகணை அமைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி, அப்துல் கலாம் மற்றும் ரஷ்யாவின் முதல் துணை தற்காப்பு அமைச்சர் என்.வி. மிகாயிலோஃப் ஆகியோர் இரு நாட்டு அரசாங்கங்கள் சார்பில் இந்த ஏவுகணை தயாரிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதில் இந்தியா 50.5 சதவீதப் பங்குகளையும், ரஷ்யா 49.5 சதவீதப் பங்குகளையும் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News