சரவாக் மாநிலத்தில் ஹெலிகாப்டர் மருத்துவச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், 85 கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த சுமார் 14,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
லோங் லெல்லாங், உலு பாராம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 7 ஹெலிகாப்டர் மருத்துவக் குழுக்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார சேவையை தொடர்ந்து வழங்க, நிலம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்தை மாற்று வழிகளாக பயன்படுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
ஆனால் பாதை நிலை, பயண நேரம், வானிலை மற்றும் வாகனத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே மாற்று போக்குவரத்து பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹெலிகாப்டர் மருத்துவ சேவை எப்போது மீண்டும் தொடங்கும் என்பது, அந்த விபத்து தொடர்பான அதிகாரப்பூர்வ விசாரணையின் முடிவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.








