18-வது பிரிக்ஸ் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சென்றுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அங்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரியும், கேரளா வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரை இன்று காலை உணவின் போது சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பில் இரு நாட்டு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மேலும், இச்சந்திப்பின் போது பேசப்பட்ட விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
காலை உணவருந்துவதற்கான மேசையில் தலைவர்கள் சுமுகமாக உரையாடுவதையும், ராகுல் காந்தியும், அன்வார் இப்ராஹிமும் புன்னகையுடன் கைகுலுக்குவதையும் காட்டும் படங்கள் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய அன்வார், இன்று எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.








