ஜோகூர் பாரு, ஜனவரி.30-
ஜோகூர் பாருவில் உள்ள பள்ளி ஒன்றின் முன்பாக 17 வயதுடைய இரு மாணவர்கள் மற்றும் 20 வயது இளைஞர் ஒருவருக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை 13 வயது மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் தொல்லை காரணமாகவே இந்த மோதல் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் மோதலில் ஈடுபட்ட மாணவர் ஆகிய இருவரும் தனித்தனியாகப் புகார் அளித்துள்ளனர்.
காயத்தை ஏற்படுத்தியதற்காக ஒரு தரப்பின் மீதும், மாணவியின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியதற்காக மற்றொரு தரப்பின் மீதும் வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இந்த மோதல் தொடர்பான வீடியோக்களைப் பகிர வேண்டாம் என்று ஜோகூர் பாரு செலத்தான் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ரவூப் செலாமாட் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.








