கோலாலம்பூர், ஜனவரி.30-
அம்னோ சுங்கை பெசார் தொகுதி தலைவர் ஜமால் யூனுஸிற்கு எதிரான அவதூறு வழக்கில் வெற்றி பெற்ற செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக், தமக்குச் சேர வேண்டிய 66 ஆயிரம் ரிங்கிட் பாக்கித் தொகையை வசூலிக்க ஜமாலின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட ஜப்தி நடவடிக்கை சட்டபூர்வமானது என்று அவரது வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, நீதிமன்ற அதிகாரிகளின் முன்னிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதில் எவ்வித அதிகார துஷ்பிரயோகமும் நடைபெறவில்லை என்றும் வழக்கறிஞர் எஸ்.என். நாயர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜமால் வீட்டில் இல்லாத சூழலில், கதவை உடைத்து உள்ளே நுழைந்தது மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்பு கோரியது ஆகியவை நடைமுறை விதிகளுக்கு உட்பட்டதே என்று அவர் விளக்கினார்.
ஜமாலின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 14 பொருட்கள் விரைவில் ஏலம் விடப்பட்டு, அதன் மூலம் திரட்டப்படும் தொகை தெரசா கோக்கிற்கு வழங்கப்பட உள்ளது. அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து ஜமால் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் எஸ்.என். நாயர் குறிப்பிட்டுள்ளார்.








