பத்து பஹாட், ஜனவரி.30-
ஜோகூர், பத்து பஹாட்டில் சில நாட்களாகக் காணாமல் போயிருந்த 41 வயது பெண், அங்குள்ள ஒரு வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் தாமான் டாமாய் II பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், வரவேற்பறையில் அந்தப் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் இறந்து சில நாட்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த வீட்டில் காயங்களுடன் இருந்த 44 வயது நபர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குற்றவியல் சட்டம் 302, கொலைக் குற்றச்சாட்டின் கீழ் விசாரணைக்காக அவரை 7 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தனது சகோதரி வீடு திரும்பவில்லை என அந்தப் பெண்ணின் சகோதரர் அளித்த புகாரைத் தொடர்ந்தே இந்தத் திடுக்கிடும் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.








