பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.30-
மசாஜ் நிலையங்களிடம் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் பணியிலுள்ள மற்றும் ஓய்வு பெற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது. வெளிநாட்டுத் தொழிலாளர் அனுமதி மற்றும் வணிகச் செயல்பாடுகளை எளிதாக்க இவர்கள் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 13.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 124 வங்கிக் கணக்குகளை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
நாடு முழுவதும் 32 கிளைகளைக் கொண்டுள்ள இந்த மசாஜ் நிலைய நிறுவனம், தனது வருமானத்தை மறைக்க இரட்டை கணக்கியல் முறையைப் பயன்படுத்தி ஆண்டுக்கு 7.56 மில்லியன் ரிங்கிட் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
மேலும், பாதுகாப்புப் பணமாக அமலாக்க அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு 2.7 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் வழங்கப்பட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் 18.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொகுசு வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.








