ஷா ஆலாம், டிசம்பர்.27-
மலேசிய குடிநுழைவுத்துறை இவ்வாண்டு நாடு தழுவிய நிலையில் நடத்திய சோதனை நடவடிக்கைகளில் 90 ஆயிரத்திற்கும் மேறபட்ட சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.
இவ்வாண்டில் மொத்தம் 13 ஆயிரத்து 678 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி வரை 2 லட்சத்து 35 ஆயிரத்து 343 அந்நிய நாட்டவர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதன் துணைத் தலைமை இயக்குநர் டத்தோ லொக்மான் எஃப்பெண்டி ரம்லி தெரிவித்தார்.
சோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 294 பேர், அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தின் அடையாள அட்டையை வைத்திருந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இலாகாவின் சோதனை நடவடிக்கைகளில் 50 ஆயிரத்து 472 பேர் பிடிபட்டுள்ள வேளையில் 41 ஆயிரத்து 357 பேர் நாட்டின் பிரதான நுழைவாயில்களில் கைது செய்யப்பட்டனர் என்று டத்தோ லொக்மான் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








