கோலாலம்பூர், ஜனவரி.26-
மலேசியக் கடற்படை உயர் அதிகாரி ஒருவர் மற்றும் அவரது நண்பர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ஊழல் புகாரைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சுமார் 7 லட்சம் ரிங்கிட் இருப்பு கொண்ட 7 நிறுவனக் கணக்குகள் மற்றும் 14 தனிநபர் வங்கிக் கணக்குகளை எஸ்பிஆர்எம் முடக்கியுள்ளது.
அந்த உயர் அதிகாரிக்குச் சொந்தமான சுமார் 2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இரண்டு ஹோட்டல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரி 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தனது பணியிடத்தில் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காகத் தனது நெருக்கமானவர்களின் நிறுவனங்களைப் பரிந்துரைத்து நியமித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்த அதிகாரியின் தனிப்பட்ட கணக்குகள் மற்றும் விடுதி நிறுவனக் கணக்குகளில் சுமார் 2 மில்லியன் வெள்ளி மதிப்பிலான சந்தேகத்திற்குரிய வைப்புத் தொகை செலுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அந்த உயர் அதிகாரி மற்றும் ஒரு நிறுவன இயக்குநர் வரும் ஜனவரி 29 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.








