புக்கிட் மெர்தாஜம், அக்டோபர்.05-
மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு முன், அவர்களின் சுகாதார அறிக்கை கட்டாயம் என மலேசியக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இப்போட்டி நடவடிக்கைகளின் போது எதிர்பாராத விதமாக மரணமடைந்த 16 வயது மாணவரின் திடீர் மறைவைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடேக் இந்த முக்கிய முடிவை வலியுறுத்தியுள்ளார்.
இனிமேல், விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தவிர்க்க, பெற்றோர் தங்கள் பிள்ளையின் உடல்நலத் தகவல்களைப் பள்ளிக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், ஒவ்வொரு போட்டிக்கும் மருத்துவக் குழுக்கள் கட்டாயம் இருப்பதை உறுதிச் செய்வதில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தொடர்ந்து மேம்படுத்த கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளது.








