Jun 4, 2026
Thisaigal NewsYouTube
ராணுவ வீரர்களுக்கு போக்குவரத்துத் துறையில் 3,208 வேலை வாய்ப்புகள்: அமைச்சுகளின் புதிய கூட்டு திட்டம்
தற்போதைய செய்திகள்

ராணுவ வீரர்களுக்கு போக்குவரத்துத் துறையில் 3,208 வேலை வாய்ப்புகள்: அமைச்சுகளின் புதிய கூட்டு திட்டம்

Share:

புத்ராஜெயா, ஜூன்.04-

நாட்டில் ராணுவ வீரர்கள் போக்குவரத்து துறையில் நுழைவதை எளிதாக்கும் வகையில், தற்காப்பு அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் 3,208 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

புத்ராஜெயாவில் துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்ட போக்குவரத்து அமைச்சுக்கும், தற்காப்பு அமைச்சுக்கும் இடையிலான வியூகக் கூட்டு ஒத்துழைப்பு நிகழ்வில் தற்காப்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் நோர்டினுடன் இணைந்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அந்தோணி லோக் இதனைத் தெரிவித்தார்.

இந்த புதிய திட்டத்தின் மூலம், ராணுவத்தில் கனரக வாகனங்களை ஓட்டிய அனுபவமுள்ள வீரர்கள், சாதாரண நடைமுறைகள் மற்றும் கூடுதல் செலவுகள் இன்றி தங்களின் ராணுவ ஓட்டுநர் உரிமத்தை நேரடியாக 'Class E' சிவிலியன் உரிமமாக மாற்றிக் கொள்ள முடியும் என்று அந்தோணி லோக் விளக்கினார்.

ஓய்வு பெறுவதற்கு முந்தைய இடைநிலை காலக்கட்டத்தில், இவர்கள் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களில் பயிற்சி பெறும் போது தற்காப்பு அமைச்சின் சம்பளமும், ஓய்வு பெற்ற பின்னர் தங்களின் மாதாந்திர ஓய்வூதியத்துடன் நிறுவனத்தின் கூடுதல் சம்பளத்தையும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.

ஆண்டுதோறும் ஓய்வு பெறும் சுமார் 5 ஆயிரம் வீரர்களின் திறமையைப் பயன்படுத்தி, நாட்டின் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சரக்கு போக்குவரத்து துறையில் நிலவும் ஓட்டுநர் பற்றாக்குறையைப் போக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

Related News