டெலிகாம் நிறுவனம் ஒன்றில் பல்வேறு மின் சாதனங்கள் மற்றும் ரொக்கப் பணத்தைத் திருடிய குற்றத்திற்காக 22 வயதுடைய முன்னாள் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட மின் சாதனங்களின் மொத்த மதிப்பு சுமார் RM83,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 12 கைபேசிகள், 3 ஆப்பிள் கைக்கடிகாரம் மற்றும் சுமார் RM550 ரொக்கப் பணம் ஆகியவை காணாமல் போனதைத் தொடர்ந்து, அதில் இந்த முன்னாள் ஊழியருக்குத் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த மே 29 அன்று அவர் பணியில் இருந்து நின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இவருக்கு இதற்கு முன் எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லை என்றும், இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்ட பிரிவு 381-இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








